Monday, 10 April 2017

சொர்க்கத் தீவு! - குமுதம் (12-04-2017) இதழில் வெளிவந்தது

சொர்க்கத் தீவு !

“மன்னிச்சிடுங்க அத்தை ஒரே டிராஃபிக். அதான் வர நேரம் ஆயிடுச்சி.” என்றாள் பாரதி

“பரவால்லடா பாரதி. உனக்கு பிடிச்ச சமையல் பண்ணிட்டேன். துணி எல்லாம் மிஷின்ல போட்டு காய வச்சிட்டேன். பாப்பாவுக்கு சாதம் ஊட்டிவிட்டுட்டேன்.

இவ்வளவு நேரம் விளையாடிக்கிட்டு இருந்தா. இப்பதான் தூங்கினா. சரி சீக்கிரம், ஸ்ரீதர் வரதுகுள்ள சேலைய மாத்து.” என்றார் மாமியார் மஹாலெஷ்மி.

“ரொம்ப தேங்ஸ் அத்தை” என்றாள் பாரதி. சிறிது நேரம் கழித்து, “என்ன மஹா உன் மருமகள இந்த தாங்குதாங்குற?” என்றார் பக்கத்து வீட்டு காமாட்சி.

“ஏன்? கல்யாணம் முடிஞ்சு யார் வீட்டுக்கோ போகப்போற மகளை தாங்கலாம். கடைசி வரை கூடவே இருக்க போற மருமகளைத் தாங்கக் கூடாதா?” என்றாள் மஹாலெஷ்மி.

“இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.” என்றாள் காமாட்சி.

“இப்படி தாங்கலேன்னாலும் ஒரு மனுசியா என் பொண்ணை அவள் மாமியார் பார்த்திருந்தா, என் பொண்ணு இந்த உலகத்தை விட்டு போயிருக்க மாட்டா. செல்லமா வளர்த்த தங்கத்தை தூக்கி நெருப்புக்கு கொடுத்துட்டு நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதுன்னதான் காமு.” என்று கண்கள் கலங்கிடச் சொன்னாள் மஹாலெஷ்மி.

“உண்மைதான் மஹா, என் மருமகளை நானும் தாங்குறேன். நன்றி மஹா” என்றார் காமாட்சி.

கிச்சனில் கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களும் கலங்கின.Sunday, 11 December 2016

புத்துணர்ச்சி! - குமுதம் (11-11-2016) இதழில் வெளிவந்தது

புத்துணர்ச்சி !


“என்ன சார் ஆபிஸ்ல யாரையும் காணும்?” என்று கேட்டபடியே வந்தார் நிறுவனத்தின் ஆலோசகர் பிரேம்.

“எல்லோரும் காபி குடிக்க போயிருக்காங்க.” என்றார் நிர்வாக அதிகாரி சந்திரவர்மன்.

“முன்னாடி எல்லாம் ஆபிஸ்பாய்தானே எடுத்து வந்து கொடுப்பார். ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டார் பிரேம்

“ஆபிஸ்பாய்க்கு பணி உயர் கொடுக்கப்பட்டது. வேறு ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார் சந்திரவர்மன்.

“இல்ல, நீங்க இப்படி சொல்லுறீங்க. ஆனா ஆபிஸ்பாய் சம்பளத்தை மிச்சம் பிடிக்கிறீங்கன்னு எனக்குத் தோணுது. என்ன காரணமுன்னு சொல்லலாமா?” என்றார் பிரேம்.

“அப்படிப் பார்த்தா மற்றப் பணியாளர்களின் சம்பளம் ஆபிஸ்பாய்யை விட பல மடங்கு அதிகம். காபி குடிக்க பணியாளர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் 15 இருந்து 20 நிமிடங்கள். அதை கணக்கிட்டு பார்த்தால், அந்த ஆபிஸ் பாயின் சம்பளத்தைப் போல பல மடங்கு வரும். அதற்கு ஆபிஸ் பாய் ஒருவருக்கே சம்பளத்தை கொடுத்துவிடலாம்.” என்றார் சந்திரவர்மன். 

“அப்புறம் ஏன் ஆபிஸ் பாய் போடலை?” என்று கேட்டார் பிரேம்.

“இங்கு அத்தனை பேருக்கும் கணினியில் வேலை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது. அதற்கு நேரமும் இருக்காது. இப்படி வேலை பார்த்தால் அவர்களுடைய உடம்புக்கு நல்லதல்ல. அதனால் தான் ஆபீஸ் பாயை நிறுத்தி விட்டு அனைவரையும் படிக்கட்டில் இறங்கி போய் காபி குடிக்க சொல்லியிருக்கிறேன். அந்த நேரத்தில் நடப்பது மற்றவர்களுடன் சிறிது சந்தோசமாக உரையாடுவது போன்ற நிகழ்வுகளால் மனசுக்கு புத்துணர்ச்சி, காபி குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சி.” என்ற சொன்னார் சந்திரவர்மன்.

“உங்கள் ஆபிஸில் வேலை செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்று சொன்ன பிரேம், “நாமும் கீழே சென்று காபி குடித்து விட்டு வருவோமா ?” என்று கேட்க, ஹஹஹஹஹ என்று சிரித்தபடி எழுந்தார் சந்திரவர்மன்.
Wednesday, 28 September 2016

வலி! - குமுதம் (05-10-2016) இதழில் வெளிவந்தது

வலி !


   “ஏங்க, குழந்தைக்கு உடம்பெல்லாம் சூடுகட்டி வந்திருக்கு. வலிக்குதுன்னு சொல்லுறா, டாக்டர்கிட்ட காட்டனும். இன்னிக்கு போகனும்” என்றாள் பிரபா.

   “போடி இன்னிக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு ராணியை, நாளைக்கு அழைத்துப்போகலாம்” என்றான் வசந்த்.

   “ஆமாம் வேலையையே கட்டிகிட்டு அழுங்க” என்று எரிச்சலாய் பிரபா.

   இரவு 10.30 மணி. வசந்த் நல்ல தூக்கத்தில் இருக்க, கைகளில் ஏதோ உரச, திடுக்கிட்டு எழுந்தான். அருகே ராணி.

   “என்னடா பன்னுற செல்லம்? ” என்றான் வசந்த்.

   “அப்பா கையில கொசு கடிச்சுது.” என்றாள் ராணி.

   “அதனால என்னபன்னுறீங்க?” என்றான்வசந்த்.

   “மருந்து தடவுறேன். கொசு கடிச்சா, அப்பாவுக்கு வலிக்குமுல்ல” என்றாள் ராணி.

   அவன் ராணியின் வார்த்தைகளுக்கு கண் கலங்க தலை குனிந்தான்.


Saturday, 18 July 2015

பண்பு! - குமுதம் (20-07-2015) இதழில் வெளிவந்தது

பண்பு !


  அழைப்பு மணி அடித்தது, கதவைத் திறந்ததும் தர்மன் பரபரபரப்போடு நின்றிருந்தான்...

  "ஹரீஷ் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்டா, ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம். என்னை எக்மோர்ல டிராப் பன்னுடா... 8.00 மணி டிரையினை பிடிச்சி ஊருக்கு போகனும்" என்றான் பதட்டமாய். அந்த பதட்டம் ஹரீஷையும் தொற்றிக் கொள்ள,

  "காரை எடு, இதோ வந்திடுறேன்." என்று விரைந்து கிளம்பி வந்து காரில் ஹரீஷ் ஏற, இருவரும் எக்மோர் விரைந்தார்கள். சிறிது தூரம் சென்றதும், ஒரு சிக்னல் வர காரை நிறுத்தினான் தர்மன்.

  "காலையில ரோடே காலியா இருக்கு. சிக்னல் ரெட் போட்டிருக்குன்னு ஏன் நிறுத்துற?" என்றான் ஹரீஷ். பேசாமல் சிக்னலையே பார்த்திருந்தான் தர்மன்.

  அவர்களுக்கு அருகே ஸ்கூட்டியில், பள்ளி யூனிஃபார்மில் இரு குழந்தைகள் அமர்ந்திருக்க, அவர்களின் அம்மா அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். பச்சை சிக்னல் மாறும் வரை காத்திருந்த தர்மன், அதற்கு பின்பே கிளம்பினான்.

  "ஏன் தர்மா, காரை நிறுத்தின?" என்றான் ஹரீஷ்.

  "ரெட் சிக்னல் போட்டிருந்தா நிக்கனுமுன்னு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாங்க. அப்போது நாம நிக்காம வந்திருந்தா அம்மா சொல்வது சும்மான்னு மனசுல பதிஞ்சுடும். பாடம் மட்டுமல்ல பண்பையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். என்னோட அம்மா இதுபோல பண்பையும் சொல்லிக் கொடுத்தாலதான் இந்த சின்ன வயசுலேயே பொது மேலாளராக இருக்கேன்." என்றான் தர்மன்.Monday, 30 March 2015

தோழமை! - மல்லிகை மகள் (ஏப்ரல்-2015) இதழில் வெளிவந்தது

தோழமை!

      அப்பா நான் மொட்டை அடிச்சிக்கனுப்பா'' என்றாள் சைந்தவி.

      விளையாடுறியா. எவ்வளவு நீளமா இருக்கு தலைமுடி. சும்மா இரு" என்று அதட்டினான் முரளி.

      மொட்டை போட்டுவிட்டாதான் ஸ்கூலுக்கு போவேன்'' என்று அழுதபடி அடம்பிடித்தாள் சைந்தவி.

      வேறு வழி இல்லாமல் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை போட்டு விட்டான் முரளி. அதன் பின்னரே பள்ளிக்கு கிளம்பினாள் சைந்தவி. நேரம் ஆக பள்ளிக்கு விரைந்து அழைத்துச் சென்றான் முரளி.

      பள்ளியின் கேட் அருகே ஒரு அம்மாவும் சைந்தவி வயதுடைய பையனும் நின்றிருந்தனர். அருகே சென்றபின்தான் கவனித்தான், அந்த பையன் தலையில் மொட்டை போட்டிருந்தான். அந்த அம்மா முரளி அருகே வந்து,

   உங்க பொண்ணுக்காக காத்திருக்கோம் சார்'' என்றார் அந்த அம்மா.

      ஏன்? யார் நீங்க? '' என்றான் முரளி.

    என் பையனுக்கு கேன்சர். கீமோதெரபி சிகிச்சையால தலையில முடி எல்லாம் கொட்டிடுச்சி. ஸ்கூலுக்கு வந்தா எல்லோரும் கிண்டல் பன்னுறாங்கன்னு வரமாட்டுறான். நேத்து டீச்சர்கிட்ட சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன். அப்போ என்னை பார்த்த சைந்தவிதான் சொன்னா, ‘நானும் மொட்டை போட்டுகிட்டு வரேன், அப்போ யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்கன்...'னு. அதனால என் பையனும் ஸ்கூல் வரேன்னு சொன்னான்' என்றார் அந்த அம்மா கண்களில் கண்ணீருடன்.


      தன் மகளின் பெருந்தன்மையை நினைத்து மெய் மறந்து நின்றான் முரளி...Monday, 24 March 2014

தண்டனை! - குங்குமம் (31-03-2014) இதழில் வெளிவந்தது

தண்டனை!

   “சார், நம்ம சர்வர் முத்துவுக்கு சம்பளத்தை குறைங்க. கஸ்டமர்கிட்ட சிடுசிடுன்னு எரிஞ்சு விழறானம்... டிப்ஸ் கேட்குறானாம்.. பலரும் புகார் சொல்றாங்க. கூட வேலை பாக்குறவங்களுக்கும் அவனை பத்தி நல்ல அபிப்ராயம் இல்லை!” - ஹோட்டல் முதலாளியிடம் சொன்னார் மேனேஜர் வாசன்.

   முத்து பல வருஷமா இருக்கான். நேரம் காலம் பார்க்காம வேலை செய்யுறான். அதை நாம் அங்கீகரிக்கணும். மத்தவங்க  சொல்றதை வைச்சி ஒரு முடிவுக்கு வரக் கூடாது!என்றார் முதலாளி,

  ஆனாலும் மேனேஜர் சமாதானம் ஆகவில்லை. தயங்கியே நின்றார்.

     “நீங்க வேணும்னா முத்து பின்னாடியே போய் நிஜத்தில் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுச் சொல்லுங்களேன்என அனுப்பி வைத்தார் முதலாளி.

     அடுத்த நாள், உற்சாக முகத்தோடு வந்து நின்றார் மேனேஜர்.

  “சார், முத்துவுக்கு சம்பளம் ஏத்தி கொடுங்க சார். அவன் எந்த தப்பும் செய்யலை. தேவையில்லாத இடத்துல ஓடுற ஃபேனையும், லைட்டையும், நிறுத்த சொல்லுறான். அது மற்றவர்களுக்கு பிடிக்காம புகார் சொல்றாங்க...என்றார் வாசன்.


  “இதுதான் சரி. எந்த ஊழியரையும் அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு தண்டிக்கக் கூடாது. அப்படி செய்தா ஆத்மார்த்தமான ஊழியர்கள் நம்மை விட்டு போய்டுவாங்கஎன்றார் முதலாளி.Tuesday, 23 October 2012

அனுபவம்! - குமுதம் (31-10-2012) இதழில் வெளிவந்தது

அனுபவம்!


   “ரமேஷ் அந்த ஸ்பானரை எடுடா

   “ரமேஷ் தண்ணீர் கொண்டு வா

   “அந்த பர்னரை எடுத்துட்டு வா சீக்கிரம்

   “ரமேஷ் இங்கே வந்து கதவை திறஎன்று முதலாளி முரளி முதல் மற்ற அனைவரும் ஆளுக்கு ஆள் ரமேஷை விரட்டியபடி வேலை வாங்கினார்கள். ரமேஷும் முகம் சுளிக்காமல் வேலைகளை மின்னல் வேகத்தில் செய்து முடித்தான்.

   ஓரு வருடம் முடிந்ததும் வாகனங்களின் அனைத்து வேலைகளையும் நன்றாக கற்றுக் கொண்ட பின், முரளி, துளசியிடம் விடைபெற்றுச் சென்றான். சில வாரங்கள் கழித்து, முரளியின் வீட்டு வாசலில், பெரிய கார் வந்து நின்றது.

   அதில் இருந்து இறங்கிய ரமேஷ். கையில் தட்டுடன் வந்து முரளி, துளசியிடம் கொடுத்து விட்டு, கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். துளசி தட்டை வாங்க, அதில் கண்ணை பறித்தது, சிகப்பு வண்ணப் பட்டுப்புடவை. அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் நின்றனர்.

   “இரண்டு பேரும் என்னை மன்னியுங்கள். நான் யார் என்று சொல்லாமல் வேலைக்குச் சேர்ந்ததால்தான் அனைத்து வேலைகளையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடிந்தது. எந்த ஒரு அனுபவமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களை வழிநடத்த முடியுது.என்றான் ரமேஷ்.

    “அப்ப, நீ... நீ... நீங்க யார்?” என்று கேட்டான் முரளி.

  விஸிடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று 10 நாட்கள் ஆகிறது,” என்றான் ரமேஷ்.