Friday 6 September 2019

ஏக்கம் ! - பொதிகை மின்னல் (ஆகஸ்ட் - 2019) இதழில் வெளிவந்தது

ஏக்கம் !


“என்னடி சந்தியா, திருவிழா கடைத் தெருவ பத்து தடவை சுத்தி வந்துட்டோம். என்னதான்டி வாங்கனும்?” என்றாள் நந்திதா.
“ஒரு பொருளை தேடிகிட்டு இருக்கேன். கிடைக்க மாட்டுது.” என்றாள் சந்தியா.
“சொன்னா நானும்தேடுவேன்ல” என்றாள் நந்திதா.
“பைனாக்குலர் வாங்குனும்டி” என்றாள் சந்தியா.
“நீ நினைச்சா தரமான கம்பெனி பைனாக்குலரே வாங்கலாம். ஏன்டி பொம்மை பைனாக்குலர் வாங்க இந்தச் சுத்து சுத்துற?” என்றாள் நந்திதா.
“எனக்கு இல்லடி” என்றாள் சந்தியா.
“அப்புறம் யாருக்குடி சந்தியா?” என்றாள் நந்திதா.
“அது வந்து... என் அப்பாவுக்கு” என்றாள் சந்தியா.
“ஏன்டி அப்பாவுக்குப் பொம்மை பைனாக்குலர் வாங்கித் தர?” என்றாள் நந்திதா.
“அப்பா சின்னப் பிள்ளையா இருக்கும் போது, அவங்க வீட்டு பைனாக்குலர் வாங்க காசு தரமாட்டாங்களாம். அது ரொம்ப ஏக்கமாக இருக்குமாம். அப்பாவோட நண்பர்கள் எல்லாம் வாங்கி வச்சி புது புதுசா காட்சிகளைப் பார்த்துச் சொல்வாங்களாம். அது இன்னும் ரொம்ப ஏக்கமாக இருக்குமாம்.

இதெல்லாம் எனக்கு விபரம் தெரியும் வயசுல இதெல்லாம் சொன்னாங்க. அதிலிருந்து எந்தத் திருவிழாவுக்குப் போனாலும், பைனாக்குலர் வாங்கிக் கொடுப்பேன். அதை அப்பா வாங்கும் போது முகத்தில் தெரியும் சந்தோசத்தைப் பார்க்க கோடி கண்கள் வேணும். நான் உலக அளவில் புகழ் பெற்ற பே|ஷன் டிசைனரா இருக்கேன்னா, எந்த ஏக்கமும் இல்லாம வளர்த்த என் அப்பாவோட உழைப்பு” என்றாள் சந்தியா.