Saturday 18 July 2015

பண்பு! - குமுதம் (20-07-2015) இதழில் வெளிவந்தது

பண்பு !


அழைப்பு மணி அடித்தது, கதவைத் திறந்ததும் தர்மன் பரபரபரப்போடு நின்றிருந்தான்...


"ஹரீஷ் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்டா, ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம். என்னை எக்மோர்ல டிராப் பன்னுடா... 8.00 மணி டிரையினை பிடிச்சி ஊருக்கு போகனும்" என்றான் பதட்டமாய். அந்த பதட்டம் ஹரீஷையும் தொற்றிக் கொள்ள,


"காரை எடு, இதோ வந்திடுறேன்." என்று விரைந்து கிளம்பி வந்து காரில் ஹரீஷ் ஏற, இருவரும் எக்மோர் விரைந்தார்கள். சிறிது தூரம் சென்றதும், ஒரு சிக்னல் வர காரை நிறுத்தினான் தர்மன்.


"காலையில ரோடே காலியா இருக்கு. சிக்னல் ரெட் போட்டிருக்குன்னு ஏன் நிறுத்துற?" என்றான் ஹரீஷ். பேசாமல் சிக்னலையே பார்த்திருந்தான் தர்மன்.


அவர்களுக்கு அருகே ஸ்கூட்டியில், பள்ளி யூனிஃபார்மில் இரு குழந்தைகள் அமர்ந்திருக்க, அவர்களின் அம்மா அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். பச்சை சிக்னல் மாறும் வரை காத்திருந்த தர்மன், அதற்கு பின்பே கிளம்பினான்.


"ஏன் தர்மா, காரை நிறுத்தின?" என்றான் ஹரீஷ்.


"ரெட் சிக்னல் போட்டிருந்தா நிக்கனுமுன்னு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாங்க. அப்போது நாம நிக்காம வந்திருந்தா அம்மா சொல்வது சும்மான்னு மனசுல பதிஞ்சுடும். பாடம் மட்டுமல்ல பண்பையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். என்னோட அம்மா இதுபோல பண்பையும் சொல்லிக் கொடுத்தாலதான் இந்த சின்ன வயசுலேயே பொது மேலாளராக இருக்கேன்." என்றான் தர்மன்.


Monday 30 March 2015

தோழமை! - மல்லிகை மகள் (ஏப்ரல்-2015) இதழில் வெளிவந்தது

தோழமை!

“அப்பா நான் மொட்டை அடிச்சிக்கனுப்பா'' என்றாள் சைந்தவி.

“விளையாடுறியா. எவ்வளவு நீளமா இருக்கு தலைமுடி. சும்மா இரு" என்று அதட்டினான் முரளி.

“மொட்டை போட்டுவிட்டாதான் ஸ்கூலுக்கு போவேன்'' என்று அழுதபடி அடம்பிடித்தாள் சைந்தவி.

வேறு வழி இல்லாமல் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை போட்டு விட்டான் முரளி. அதன் பின்னரே பள்ளிக்கு கிளம்பினாள் சைந்தவி. நேரம் ஆக பள்ளிக்கு விரைந்து அழைத்துச் சென்றான் முரளி.

பள்ளியின் கேட் அருகே ஒரு அம்மாவும் சைந்தவி வயதுடைய பையனும் நின்றிருந்தனர். அருகே சென்றபின்தான் கவனித்தான், அந்த பையன் தலையில் மொட்டை போட்டிருந்தான். அந்த அம்மா முரளி அருகே வந்து,

“உங்க பொண்ணுக்காக காத்திருக்கோம் சார்'' என்றார் அந்த அம்மா.

“ஏன்? யார் நீங்க? '' என்றான் முரளி.

“என் பையனுக்கு கேன்சர். கீமோதெரபி சிகிச்சையால தலையில முடி எல்லாம் கொட்டிடுச்சி. ஸ்கூலுக்கு வந்தா எல்லோரும் கிண்டல் பன்னுறாங்கன்னு வரமாட்டுறான். நேத்து டீச்சர்கிட்ட சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன். அப்போ என்னை பார்த்த சைந்தவிதான் சொன்னா, ‘நானும் மொட்டை போட்டுகிட்டு வரேன், அப்போ யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்கன்...'னு. அதனால என் பையனும் ஸ்கூல் வரேன்னு சொன்னான்' என்றார் அந்த அம்மா கண்களில் கண்ணீருடன்.

தன் மகளின் பெருந்தன்மையை நினைத்து மெய் மறந்து நின்றான் முரளி...