Sunday 15 July 2018

கடமை! - 20 ஜுலை - 2017 பொதிகை சாரல் இதழில் வெளிவந்தது

கடமை !

“அப்பா புதுசா கேமரா வாங்கி இருக்கேன்.” என்று ஆர்வமாய் காட்டினான் மதன்.

“அவ்வளவு பணம் ஏது?” என்று கேட்டார் மாணிக்கம்.

“எனது நண்பன் கிட்ட கேமரா இரவல் வாங்கி, சில விளம்பரத்துக்கு, புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன். அதில் கிடைத்த பணம்” என்றான் மதன். மாணிக்கம் அதை வாங்கி பார்த்துவிட்டு, சோம்பல் படாமல் நன்றாக உழைக்க சொல்லி, வாழ்த்துக்கள் சொன்னார்.

அதன் பின் எதையும் மதன் தன் அப்பாவிடம் கேட்பதில்லை. புதிதாக வாங்குதை மட்டும் கொண்டு வந்து காட்டுவான். கல்லூரி முடிந்து சில நிறுவனங்களில் பணிபுரிந்து சில வருடங்கள் கழிந்த பின் தனியாக நிறுவனம் தொடங்க போவதாக சொன்னான் மதன். சில மாதங்கள் வரை வங்கியில் கடன் கிடைக்காமல், மதன் தடுமாறுவதை கவனித்த மாணிக்கம்.

மதனை காத்திருக்க சொல்லிவிட்டு போனார், ஒரு மணி நேரம் கழித்து, வந்து அவனது மேஜையில் நிறைய தங்க காசுகளை அடுக்கினார்.

“இது உனக்கு நான் வாங்கி கொடுக்க வேண்டிய கேமரா போன்ற பொருட்களுக்கான பணத்தில் இந்த தங்க காசு வாங்கி வங்கியில் வைத்திருந்தேன். அப்பவே இந்த பணத்தை கொடுத்திருக்கலாம், ஆனா உன் உழைப்பில் வாங்கிய பொருட்களில் கிடைக்கும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அப்பா வாங்கி கொடுத்தால் கிடைக்காது. வெறியோடு ஆத்மார்த்தமாய் உழைத்திருக்கவும் முடியாது. எது வாங்கினாலும் அப்பா பணம் தருவாங்க என்ற எண்ணமும் சோம்பேறித்தனமும் வந்திருக்கும்.

குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது மட்டும் அப்பாவின் கடமையல்ல தன்னம்பிக்கையும் தைரியத்தை கொடுப்பதுதான் அப்பாவின் உண்மையான கடமை” என்றார் மாணிக்கம்.