Tuesday 5 December 2017

அரவணைப்பு! - குமுதம் (13-12-2017) இதழில் வெளிவந்தது

அரவணைப்பு !

“என்னடி, சரண்யாவோட, பிறந்த குழந்தைக்கு டிரஸ் வாங்கச் சொன்னா, அவளோட பெரிய பையன் போடுற மாதிரி வாங்கிட்டு வந்திருக்க?” என்று கேட்டாள் சரஸ்வதி.

“ஆமாம் அக்கா, குழந்தைக்கு வாங்கலை. பெரியவனுக்குதான் வாங்கி இருக்கேன்.” என்றாள் வினோதா.

“ஆமாம்டி ஊர்ல இல்லாத அதிசயமா செய்யுற...” என்று புலம்பிவிட்டுச் சென்றாள் சரஸ்வதி.

அடுத்த நாள், சரண்யாவின் வீட்டுக்குச் சென்றார்கள். சரஸ்வதி பிறந்த குழந்தையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்க, வினோதாவோ சரண்யாவின் பெரிய பையனை வீட்டினுள் சென்று தேடிக் கண்டுபிடித்து, அழைத்து வந்து அவனுக்கு அந்த புது ஆடையை அணிவித்து அவனை தன் மடியில் வைத்து, வாங்கி வந்திருந்த இனிப்பை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

'பிறந்த குழந்தையைப் பார்க்காமல் பெரிய குழந்தையை கொஞ்சிக்கிட்டு இருக்காளே வினோதா' என்று சரஸ்வதிக்கு எரிச்சலாக வந்தது. நீண்ட நேரம் கழித்து விடை பெற்று வீட்டுக்கு வந்தார்கள்.

அடுத்தநாள், வினோதா வெளியே சென்றிருக்கும் நேரம், சரண்யா போனில் அழைத்தாள். 'வினோதாவை திட்டப் போகிறாள்' என்று நினைத்து போனை எடுக்க,

“வினோதா இல்லையா? நேத்து வந்தவங்க எல்லோரும் பிறந்த குழந்தையை மட்டும் கொஞ்ச, பையனுக்கு கோவிச்சிக்கிட்டு மாடிக்கு போயிட்டான். காலைலேர்ந்து கீழேயே வரலை. வினோதா மட்டும்தான் அவனுக்கு டிரஸ் எடுத்து வந்து அவனை அவ மடியில வச்சிகிட்டதும் அவனுக்கு சந்தோசம் தாங்கலை சரசு. ரொம்ப தேங்ஸ்டி” என்று சொன்னாள் சரண்யா.

அதை கேட்டதும் பெரிய குழந்தையின் மனதை புரிந்து கொண்ட வினோதாவின் நோக்கம் புரிந்தது சரஸ்வதிக்கு, அக்காவாக பெருமிதம் கொண்டாள்.





Monday 10 April 2017

சொர்க்கத் தீவு! - குமுதம் (12-04-2017) இதழில் வெளிவந்தது

சொர்க்கத் தீவு !

“மன்னிச்சிடுங்க அத்தை ஒரே டிராஃபிக். அதான் வர நேரம் ஆயிடுச்சி.” என்றாள் பாரதி

“பரவால்லடா பாரதி. உனக்கு பிடிச்ச சமையல் பண்ணிட்டேன். துணி எல்லாம் மிஷின்ல போட்டு காய வச்சிட்டேன். பாப்பாவுக்கு சாதம் ஊட்டிவிட்டுட்டேன்.

இவ்வளவு நேரம் விளையாடிக்கிட்டு இருந்தா. இப்பதான் தூங்கினா. சரி சீக்கிரம், ஸ்ரீதர் வரதுகுள்ள சேலைய மாத்து.” என்றார் மாமியார் மஹாலெஷ்மி.

“ரொம்ப தேங்ஸ் அத்தை” என்றாள் பாரதி. சிறிது நேரம் கழித்து, “என்ன மஹா உன் மருமகள இந்த தாங்குதாங்குற?” என்றார் பக்கத்து வீட்டு காமாட்சி.

“ஏன்? கல்யாணம் முடிஞ்சு யார் வீட்டுக்கோ போகப்போற மகளை தாங்கலாம். கடைசி வரை கூடவே இருக்க போற மருமகளைத் தாங்கக் கூடாதா?” என்றாள் மஹாலெஷ்மி.

“இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.” என்றாள் காமாட்சி.

“இப்படி தாங்கலேன்னாலும் ஒரு மனுசியா என் பொண்ணை அவள் மாமியார் பார்த்திருந்தா, என் பொண்ணு இந்த உலகத்தை விட்டு போயிருக்க மாட்டா. செல்லமா வளர்த்த தங்கத்தை தூக்கி நெருப்புக்கு கொடுத்துட்டு நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதுன்னதான் காமு.” என்று கண்கள் கலங்கிடச் சொன்னாள் மஹாலெஷ்மி.

“உண்மைதான் மஹா, என் மருமகளை நானும் தாங்குறேன். நன்றி மஹா” என்றார் காமாட்சி.

கிச்சனில் கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களும் கலங்கின.