Monday, 8 August 2011

உழைப்பு! - குமுதம் (10-08-2011) இதழில் வெளிவந்தது

உழைப்பு !

''பிரபு, ஏன் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையை சொல்லித்தருவதில்லையாம்! ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித்தருகிறாராம்.'' என்று கேட்டார் பொது மேலாளர்.

''மன்னிக்கனும் சார், ஏதாவது ஒரு புதிய வேலைய எங்கள் இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள் ஆட்களுக்கு சொல்லித் தருகிறோம். அடுத்த வாரம் அதே போல வேலையை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து, நீங்களே நேரடியாக கண்காணியுங்கள்.'' என்றான் பிரபு. அதே போல ரகுவுக்கும் பிரபுவுக்கும் புது வேலையைக் கொடுத்தார் பொது மேலாளர்.

ரகுவின் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில் பிரபுவின் ஆள் வேலையை முடித்து விட்டான். ரகுவின் ஆள் மூன்று முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான். ஒரு வழியாக 5 மணி நேரத்தில் முடித்தான். பொது மேலாளர் பிரபுவை அழைத்து,

''எப்படி முடிந்தது?'' என்று கேட்டார் பொது மேலாளர்.

''சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக் கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது. அதனால் விளைவுகளை மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ என்று நேரம் கொடுத்து விட்டுடனும். தேடிபிடிச்சி கத்துகிட்டா, கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும் பணத்திற்கு மதிப்பு அதிகம்.''  என்றான் பிரபு.

''நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைப்படுகிறேன்.'' என்றார் பொது மேலாளர்.


Thursday, 30 June 2011

அவசர வேலை! - குமுதம் (6-7-2011) இதழில் வெளிவந்தது

அவசர வேலை!

''ஏங்க நம்ம குழந்தைய பள்ளிக்கூடம் அழைச்சிட்டு போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துட்டு ஆபீஸ் போங்க' என்று சொன்னாள் நீலா

''போடி எனக்கு ஆபிஸ்ல அவசரமான வேலை இருக்கு. டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா' என்று சொல்லி விட்டு அலுவகத்திற்கு கிளம்பினான் ராஜன்.

''ஆமாம் பிள்ளையின் பாட புத்தகத்தை வாங்கிக் கூட முடியாமல் அப்படி என்ன ஆபீஸ் வேலையே போங்க' என்று எரிச்சலாய் சொன்னாள் நீலா சிறிது நேரத்தில், நீலா சமையலை முடித்துவிட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று, புத்தகங்கள் வாங்க வரிசை நின்று கொண்டிருந்தாள்.

அப்போது ராஜனின் முதலாளி மனைவியும் அவரது குழந்தைகளும் பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். பின்னாடியே, முதலாளியின் குழந்தைகளின் புத்தகங்களைத் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தான் ராஜன்.

அவன் முன் முன்னாடி போய் நின்றாள் நீலா. 'இதுதான் அவசரமான வேலையா ? ' என்று கேட்டாள்.

ராஜனால் பதிலே பேச முடியாமல் பேய் முழி முழித்தான்.

Friday, 20 May 2011

சுத்தம்! - குமுதம் (25-5-2011) இதழில் வெளிவந்தது

சுத்தம்!

''இங்கே எச்சில் துப்பக் கூடாது'' என்றாள் ராணி.

''ஏம்மா துப்பக் கூடாது ?.' என்றான் ராமு.

''இது ஸ்கூல் எல்லா மாணவர்களும் நடமாடும் இடம்'' என்றாள் ராணி.

''அதனால என்ன?'' என்றான் ராமு.

''எச்சிலை மிதிச்சா தொற்று நோய் பரவுமுல்ல. அதனால தான்'' என்றாள் ராணி.

அவனுக்கு தப்பு செய்த மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடிச்சது மாதிரி இருந்தது.

''ஆமாம். சரிதான். தெரியாம பண்ணிட்டேன். இனிமேல் கண்ட இடத்தில் எச்சில் துப்ப மாட்டேன்.'' என்றான் ராமு.

வண்டி பள்ளி முன்பு நிற்க,

''சரி நான் வரேன். ஸ்கூலுக்கு மணி ஆச்சு'' என்று சொல்லிவிட்டு, வண்டியை விட்டு இறங்கி சென்றாள் நான்கே வயதான பள்ளி மாணவி ராணி, வாயடைத்து நின்றான் தனியார் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராமு.

Tuesday, 26 April 2011

மந்திரம்! - குமுதம் (4-5-2011) இதழில் வெளிவந்தது

மந்திரம்!

ராமு தன் மனைவி ரதியிடம் கோபித்துக் கொண்டதால் முதல் முறையாக அவள் அம்மா  வீட்டுக்கு சென்றுவிட, அவனுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் எது எங்கே இருக்குன்னு தெரியாமால் படாத பாடு பட்டுவிட்டான். சட்டை எடுக்க பிரோவை திறக்க, முன்னாடி வந்து விழுந்தது ரதியின் டைரி.

எடுத்து படிக்க ஆரம்பித்தான்...

''அலுவலகம் செல்ல அவசர குளியல் போட்டு கிளம்பும் உன்னை, தலை முதுகு தேய்த்து, குளிப்பாட்டி உன் தலையை என் முந்தானையால் துவட்டும் என் கடைமையை செய்ய நேரம் இல்லையே என்ற வருத்தமடா எனக்கு''

"என்னடி.....ன்னு நீ என்னை கூப்பிடும் போது என் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் புதிதாய் பிறந்தது போன்ற உணர்வு எனக்குள்."

''மாமான்னு நான் கூப்பிடும்போது சிலிர்க்கும் உன் கண்களையும் மலரும் உன் முகத்தையும் பார்க்க கோடி கண்கள் வேண்டுமடா''

''எனது கோபமோ உனது கோபமோ நீர்குமிழி மாதிரி சிறிது நேரத்தில் முடிந்துவிடும், அதனால் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு மட்டும் போகக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன். ஏன்னா நான் இல்லாமல் நீ சிரம படக்கூடாது என்றுதான்டா''

ராமுவுக்கு ரதியின் அன்பு கலந்த வரிகளை படித்ததும் சாட்டையால் அடித்தார் போல உணர்ந்தான். உடனே கிளம்பினான், அலுவலகம் அல்ல அந்த தேவதையின் அம்மா வீட்டுக்கு... தேவதையை அழைத்து வர...


Friday, 25 February 2011

அம்மா! - மல்லிகை மகள் (மார்ச்-2011) இதழில் வெளிவந்தது

அம்மா!

"ஏம்மா.. அவர் திரும்ப இங்கு வர்ற வரைக்கும் இருக்குறேன்னு வந்த.. ரெண்டு நாளிலேயே திரும்ப ஊருக்கு போயிட்ட? " போனில் கேட்டாள் பிரபா.

"ஆமா! மாப்பிள்ளைகிட்ட போன்ல பேசுறப்பவே பாடா படுத்தி எடுக்குற, இன்னும் நேர்ல எப்படி படுத்துவே! அதை எல்லாம் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.. அதான் வந்துட்டேன். ஆனாலும் மாப்பிள்ளைக்கு ரொம்பதான் பொறுமை." என்றார் மரகதம்மாள்.

"ஆமா நான் கேட்டுக்குற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டாமா? " என்றாள் பிரபா.

"ஆமா.. நீ எஜமானி மாதிரி நீ கேட்குற தோரணையே ஆளை அடிக்குற மாதிரி இருக்கு. அவருக்கு பெத்தவங்க இல்லைங்கிறதுக்காக உனக்கு அடிமையில்லை. உன் பிள்கைகள் யாராவது திட்டினா, நீ சும்மா இருப்பியா? அது போலதான் மாப்பிள்ளையோட அம்மா இருந்தா நீ பேசுறத பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா?

உனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கார். தனக்கு வர போற மனைவி, அன்பான அம்மாவா, மணக்கும் மனைவியா  தோழமையான தோழியா இருப்பானு நினைச்சிதான் உன்னை கல்யாணம் செய்திருப்பார். ஆனால் நீ அப்டியா நடந்துக்குற? அவருக்கும் மனசும், உணர்வும் இருக்குன்னு புரிஞ்சுக்கோ.

ஒரு அம்மா மனைவியாக முடியாது. ஆனா, ஒரு மனைவி  அம்மாவாக முடியும். அதை நீ முழுமையா உணர்ந்தாதான் வாழ்க்கையை சந்தோசமா வாழ முடியும். நீ மட்டுமல்ல உன் குழந்தைகளும்.” என்றார் மரகதம்மாள்.

பிரபாவுக்கு நெத்தியில் அடித்தார் போல இருந்தது அம்மாவின் வார்த்தைகள். அம்மாவிடம் சொன்னாள்..

“மன்னிச்சிடும்மா, இனிமே அவர் என்னுடைய மூத்த குழந்தை போல பார்த்துக்குறேன்.”