Thursday 10 May 2018

வாழ்க்கை! - பாவையர் மலர் (ஏப்ரல் 2018) இதழில் வெளிவந்தது

வாழ்க்கை !

அழைப்பு மணி அழைத்ததும், கதவை திறந்த, சாந்தா அதிர்ந்தாள்.
“வா பாட்டி, உனக்கு விசயம் தெரிந்ததும் என்னைவிட்டு பிரிந்துடுவியோன்னுதான் உன்கிட்ட சொல்லல.” என்று அழுகையின் ஊடே சொன்னாள் சாந்தா. பாட்டி அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

“அசடு, நீ எதையும் யோசிச்சிதான் செய்வ. எனக்கு தெரியும். காலம் மாறிடுச்சி. அதுக்குத் தகுந்தாற்போல நாமும் மாறிக்கனும். உன் திருமண ஏற்பாடுகளை கவனி. உன் அப்பா அம்மா சம்மதிக்கலைன்னு கவலைபடாதே.. நான் இருக்கேன் உனக்கு.” என்று ஆறுதலாய் சொன்னாள் பாட்டி.

இதை கேட்டதும் அசுர பலம் வந்திருந்தது சாந்தாவுக்கு. அந்த வேகத்திலயே அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து முடித்தாள். அன்று அவளுக்கு திருமணம்.

தாலிக்கட்டி முடிந்ததும், நிமிர்ந்த சாந்தா சந்தோசத்தில் திணறினாள். அட்சதையை தூவியவாறு எதிரே அவளின் அப்பாவும் அம்மாவும் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும். தனியாக அழைத்துப் போன அம்மா,

“உன் குடிகார கணவன் இறந்ததும், நாங்களாவது நல்ல மாப்பிளையாக பார்த்து, உனக்கு மறுமணம் செய்து வைத்திருக்கனும். அந்த கால மனுஷியான பாட்டிக்கு இருந்த தைரியம் கூட எங்களுக்கு இல்லாமல் போயிடுச்சிடி. மத்தவங்க வார்த்தைகளுக்காக கவலைப்பட்ட நாங்க, உன் வாழ்க்கைக்காக கவலைப்படாம விட்டுட்டோமே. எங்களை மன்னிச்சிடு சாந்தா.” என்று சாந்தாவின் காலில் விழப்போன அம்மாவை, தடுத்து சந்தோசமாய் அணைத்தாள் சாந்தா.


Friday 4 May 2018

மருத்துவம்! - பாக்யா (30-04-2018) இதழில் வெளிவந்தது

மருத்துவம் !

டாக்டர் கல்பனா சுரேஷ் க்ளினிக்ல மட்டும் அதிகமாக கூட்டம் வருது. என் க்ளினிக்ல இரண்டு, மூன்று பேர்தான் வாராங்க. கட்டணம் கம்மியாதான் வாங்குறேன். குறைவான விலையில நல்ல மருந்துகள் எழுதி கொடுக்குறேன். முதல்முறை வராங்க. அடுத்த முறை வரமாட்டுறாங்க. ஏன்னே புரியலை சார்என்று பிரபல மருத்துவமணையின் தலைவர் வாசுதேவனிடம் கேட்டார் டாக்டர் தங்கச்செல்வி.

                அதை கேட்டதும் செய்ய வேண்டியதை சொல்லி அனுப்பினார். அடுத்த சில மாதங்கள் கழித்து, தங்கச்செல்வியிடம் க்ளினிக் பற்றி கேட்டார்.

                “நீங்க சொன்ன மாதிரி நோயாளியாக, கல்பனா க்ளினிக் சென்று பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது, நான் எவ்வளவு தப்பு செய்திருக்கேன்னு.” என்றார் தங்கச்செல்வி.

                “என்ன தப்பு செய்தீங்க?” என்றார் வாசுதேவன்.

                “நோயாளிகள் எது சொன்னாலும் கவனமா கேட்கறது இல்ல, சும்மா சிரிச்சி, அவர்களின் கஷ்டத்தை கிண்டல் செய்திருக்கேன். நாய் குதறுகிற மாதிரி அனைவரையும் வார்த்தைகளால் குதறியிருக்கேன். ஏதோ நான் மட்டுமே கடவுள் மாதிரி தலைக்கனத்தோட மருத்துவம் பார்த்திருக்கேன்.

                ஆனா கல்பனா சுரேஷ் பெயரில் மட்டுமல்லாமல் பேசுவதிலும் கனிவான மொழியில் தான் பேசுகிறார். நோயாளிகள் சொல்வதை மிககவனமாக கேட்கிறார். சரியாகிடும் என்று ஆறுதலாக பதில் சொல்கிறார். அதிலேயே பாதி நோய் சரியாகிடும், அதனால்தான் நோயாளிகளுக்கு உண்மையான கடவுளாக தோன்றுகிறார்.

அதனால்தான் நிறைய பேர் காத்திருந்து அவரிடம் மருத்துவம் பார்த்து விட்டு செல்கிறார்கள், என்பதை உணர்ந்து கொண்டேன்.” என்ற தங்கச்செல்வி மனம் தெளிவடைந்திருந்தது..