Thursday 6 December 2018

ஆதரவு ! - பொதிகை மின்னல் (டிசம்பர் - 2018) இதழில் வெளிவந்தது

ஆதரவு !

“அய்யா, நாளைக்கு வருமான வரி வழக்கு தீர்ப்பு வருது. நீங்களும் வந்தா நல்லா இருக்கும்.” என்றார் வழக்கறிஞர் ரத்னாகர்.

“அவசியம் வரனுமா?” என்று கேட்டார் பிரபல தொழில் அதிபர் மதன்.


“நீதிபதி, புதுசா வந்திருக்காங்க. நீங்களும் வந்தா நல்லாயிருக்கும்” என்றார் ரத்னாகர்.


“சரி. வரேன். நீங்க ஆக வேண்டிய வேலைகளை பாருங்க” என்றான் மதன்.


மறுநாள், நீதிமன்றத்தில்,


“ஆகவே, அபராதமும் சேர்த்து 5 கோடி கட்டவேண்டும். இல்லை என்றால் விளையாட்டு வீரர் ஒருவரை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வீரர் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் வரை.” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.


“விளையாட்டு வீரரை தத்தெடுக்குறோம்” என்றான் மதன். அனைத்தும் முடிந்ததும் காரில் ஏறியதும்,


“அய்யா, 5 கோடி பணத்தை கட்டினால் வேலை முடிந்திருக்குமே. விளையாட்டு வீரருக்கு இன்னும் பல கோடி செலவாகுமே.” என்றார் ரத்னாகர்.


“சரிதான். ஆனால் விளையாட்டு வீரரை யாரும் தத்தெடுக்க மாட்டுறாங்க. 5 கோடி பணம் கட்டுவதை விட 10 கோடி விளையாட்டு வீரருக்கு செலவு செய்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கினால் இந்தியாவுக்கே பெருமை. நமது நிறுவனத்திற்கும் விளம்பரம். அதனால் வருமானம் அதிகம் கிடைத்தால் தாராளமாக செலவு செய்யலாமே.


இதை பார்க்கின்ற மற்ற நிறுவனங்களும் செய்ய ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியிலில் நம் நாடும் இடம் பெறும். அந்த நீச்சல் வீரர் மாதிரி, ஆதரவு கிடைக்காமல் வெளிநாட்டில் போய் கலங்கிய மனதுடன் வேலை பார்க்க வேண்டி இருக்காது.” என்றான் மதன்.


“உங்களுக்கு தொலை நோக்கு பார்வை மட்டுமல்ல, பெரிய மனசும்” என்றார் ரத்னாகர்..








No comments:

Post a Comment