Friday 6 September 2019

ஏக்கம் ! - பொதிகை மின்னல் (ஆகஸ்ட் - 2019) இதழில் வெளிவந்தது

ஏக்கம் !


“என்னடி சந்தியா, திருவிழா கடைத் தெருவ பத்து தடவை சுத்தி வந்துட்டோம். என்னதான்டி வாங்கனும்?” என்றாள் நந்திதா.
“ஒரு பொருளை தேடிகிட்டு இருக்கேன். கிடைக்க மாட்டுது.” என்றாள் சந்தியா.
“சொன்னா நானும்தேடுவேன்ல” என்றாள் நந்திதா.
“பைனாக்குலர் வாங்குனும்டி” என்றாள் சந்தியா.
“நீ நினைச்சா தரமான கம்பெனி பைனாக்குலரே வாங்கலாம். ஏன்டி பொம்மை பைனாக்குலர் வாங்க இந்தச் சுத்து சுத்துற?” என்றாள் நந்திதா.
“எனக்கு இல்லடி” என்றாள் சந்தியா.
“அப்புறம் யாருக்குடி சந்தியா?” என்றாள் நந்திதா.
“அது வந்து... என் அப்பாவுக்கு” என்றாள் சந்தியா.
“ஏன்டி அப்பாவுக்குப் பொம்மை பைனாக்குலர் வாங்கித் தர?” என்றாள் நந்திதா.
“அப்பா சின்னப் பிள்ளையா இருக்கும் போது, அவங்க வீட்டு பைனாக்குலர் வாங்க காசு தரமாட்டாங்களாம். அது ரொம்ப ஏக்கமாக இருக்குமாம். அப்பாவோட நண்பர்கள் எல்லாம் வாங்கி வச்சி புது புதுசா காட்சிகளைப் பார்த்துச் சொல்வாங்களாம். அது இன்னும் ரொம்ப ஏக்கமாக இருக்குமாம்.

இதெல்லாம் எனக்கு விபரம் தெரியும் வயசுல இதெல்லாம் சொன்னாங்க. அதிலிருந்து எந்தத் திருவிழாவுக்குப் போனாலும், பைனாக்குலர் வாங்கிக் கொடுப்பேன். அதை அப்பா வாங்கும் போது முகத்தில் தெரியும் சந்தோசத்தைப் பார்க்க கோடி கண்கள் வேணும். நான் உலக அளவில் புகழ் பெற்ற பே|ஷன் டிசைனரா இருக்கேன்னா, எந்த ஏக்கமும் இல்லாம வளர்த்த என் அப்பாவோட உழைப்பு” என்றாள் சந்தியா.


Tuesday 9 April 2019

உணர்வு ! - பொதிகை மின்னல் (மார்ச் - 2019) இதழில் வெளிவந்தது

உணர்வு !

“உங்க அப்பா எனக்கு வண்டி வாங்கி தரலை. அதனால எல்சிடி டீவி வாங்கி தரசொல்லுடி, ஏசி வாங்கி தரசொல்லுடி.” என்று அடிக்கடி அக்கா மீராவிடம் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டதும் குருவுக்கு மனது கஷ்டப்பட்டது. அக்காவை மாமா ரொம்ப கொடுமை படுத்துகிறாரோ என்று.

அடுத்த சில வாரங்களில் மீராவுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமணையில் சேர்த்;தார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் பணம் ஏற்பாடு செய்யுங்கள் என்று மருத்துவர்கள் சொல்லிவிட, பணத்திற்கு படாத பாடுபட்டு ஏற்பாடு செய்தான் கிருஷ்ணன்.

“மாமா என்கிட்ட 15,000 ரூபாய் இருக்கு தரவா மாமா.” என்றான் குரு

“மாப்பிள்ளை 10,000 ரூபாய் உங்க வங்கி கணக்குல போடவா?.” என்று தொலைபேசியில் கேட்டார் ஊரில் இருந்த மாமனார்.

“வேணாம். தேவைன்னா கேக்குறேன்.” என்று மறுத்தான் கிருஷ்ணன்.

“ஏண்ணா நாங்க பணம் கொடுத்தா வாங்க மாட்டிங்களா? நாங்க உங்க தங்கை இல்லையா? நாங்கள் செய்யாம வேறு யாரு செய்வதாம்.” என்று உரிமையோடு சண்டையிட்டாள் மைத்துனரின் மனைவி மீனாட்சி.

“இல்ல மீனாட்சி. என் மனைவிக்கு நான்தான் செய்யனும். என் உணர்வுகளுக்கு தயவு செய்து மதிப்பு கொடுங்கள்.” என்று சொன்னான் கிருஷ்ணன். இதை கேட்ட குருவுக்குள் கிருஷ்ணனின் மதிப்பு உயர்ந்தது.

சில மாதங்கள் கழித்து, “உங்க அப்பா எனக்கு வண்டி வாங்கி தரலை.” என்று கிருஷ்ணன் மீராவிடம் சொல்ல, குரு சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.







ஆசை... தோசை... - பொதிகை மின்னல் (பிப்ரவரி - 2019) இதழில் வெளிவந்தது

ஆசை... தோசை...

குந்தைகள் சத்தத்தால் வீடே அதிர்ந்தது.

“தாத்தா என்னை ஊஞ்சல்ல வைச்சி ஆட்டுங்க தாத்தா” என்று கொஞ்சலாய் சொன்னாள் மூத்தமகனின் மகள் சுமித்ரா.

“தாத்தா என்னை உப்பு மூட்டை தூக்குங்க தாத்தா.” என்றான் இளைய மகனின் மகன் சுரேஷ்.

“என்ன மாமா பிள்ளைகள் ரொம்ப தொந்தரவு செய்யிறாங்களா? சாப்பிடுங்க மாமா” என்றபடி மூத்த மருமகள் இளையநிலா முடக்கத்தான் தோசையுடன் வந்தாள்.

“குழந்தைகளா தாத்தாவை தொந்தரவு பன்னாதீங்க. கொஞ்சம் ஜுஸ் குடிங்க மாமா”  என்றபடி இளைய மருமகள் மல்லிகா சர்க்கரை கலக்காத திராட்சை பழசாறுடன் வந்தாள்.

“அப்பா நம்ம தொழிலாளர்களுக்கு இனிமேல் முதல் தேதியே சம்பளம் கொடுக்கனுப்பா” என்றபடி விடைப்பெற்று சென்றான் மூத்த மகன் சிவராஜ்.

“இந்த வருடம் கணிசமாக சம்பளம் ஏத்திக் கொடுக்கனும் நம்ம தொழிலாளர்களுக்கு.” என்று சொல்லி சிறிது நேரம் ஆலோசணை கேட்டு, விடைப் பெற்றான் இளையமகன் சண்முகம்.

“ஏங்க, நான் முருகன் கோயிலுக்கு போயிட்டு வரேன்.” என்று கிளம்பினாள் மனைவி வளர்மதி.

“ஐயா, ஐயா” என்று எழுப்ப, தூங்கிக் கொண்டிருந்தவர் கண்களை திறந்தார், வீடே அமைதியாக இருக்க, எதிரே கோதுமை தோசையுடன் நின்றிருந்தான் வேலைக்காரன் கதிர்.