Thursday 10 May 2018

வாழ்க்கை! - பாவையர் மலர் (ஏப்ரல் 2018) இதழில் வெளிவந்தது

வாழ்க்கை !

அழைப்பு மணி அழைத்ததும், கதவை திறந்த, சாந்தா அதிர்ந்தாள்.
“வா பாட்டி, உனக்கு விசயம் தெரிந்ததும் என்னைவிட்டு பிரிந்துடுவியோன்னுதான் உன்கிட்ட சொல்லல.” என்று அழுகையின் ஊடே சொன்னாள் சாந்தா. பாட்டி அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

“அசடு, நீ எதையும் யோசிச்சிதான் செய்வ. எனக்கு தெரியும். காலம் மாறிடுச்சி. அதுக்குத் தகுந்தாற்போல நாமும் மாறிக்கனும். உன் திருமண ஏற்பாடுகளை கவனி. உன் அப்பா அம்மா சம்மதிக்கலைன்னு கவலைபடாதே.. நான் இருக்கேன் உனக்கு.” என்று ஆறுதலாய் சொன்னாள் பாட்டி.

இதை கேட்டதும் அசுர பலம் வந்திருந்தது சாந்தாவுக்கு. அந்த வேகத்திலயே அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து முடித்தாள். அன்று அவளுக்கு திருமணம்.

தாலிக்கட்டி முடிந்ததும், நிமிர்ந்த சாந்தா சந்தோசத்தில் திணறினாள். அட்சதையை தூவியவாறு எதிரே அவளின் அப்பாவும் அம்மாவும் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும். தனியாக அழைத்துப் போன அம்மா,

“உன் குடிகார கணவன் இறந்ததும், நாங்களாவது நல்ல மாப்பிளையாக பார்த்து, உனக்கு மறுமணம் செய்து வைத்திருக்கனும். அந்த கால மனுஷியான பாட்டிக்கு இருந்த தைரியம் கூட எங்களுக்கு இல்லாமல் போயிடுச்சிடி. மத்தவங்க வார்த்தைகளுக்காக கவலைப்பட்ட நாங்க, உன் வாழ்க்கைக்காக கவலைப்படாம விட்டுட்டோமே. எங்களை மன்னிச்சிடு சாந்தா.” என்று சாந்தாவின் காலில் விழப்போன அம்மாவை, தடுத்து சந்தோசமாய் அணைத்தாள் சாந்தா.


No comments:

Post a Comment