Monday 30 March 2015

தோழமை! - மல்லிகை மகள் (ஏப்ரல்-2015) இதழில் வெளிவந்தது

தோழமை!

“அப்பா நான் மொட்டை அடிச்சிக்கனுப்பா'' என்றாள் சைந்தவி.

“விளையாடுறியா. எவ்வளவு நீளமா இருக்கு தலைமுடி. சும்மா இரு" என்று அதட்டினான் முரளி.

“மொட்டை போட்டுவிட்டாதான் ஸ்கூலுக்கு போவேன்'' என்று அழுதபடி அடம்பிடித்தாள் சைந்தவி.

வேறு வழி இல்லாமல் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை போட்டு விட்டான் முரளி. அதன் பின்னரே பள்ளிக்கு கிளம்பினாள் சைந்தவி. நேரம் ஆக பள்ளிக்கு விரைந்து அழைத்துச் சென்றான் முரளி.

பள்ளியின் கேட் அருகே ஒரு அம்மாவும் சைந்தவி வயதுடைய பையனும் நின்றிருந்தனர். அருகே சென்றபின்தான் கவனித்தான், அந்த பையன் தலையில் மொட்டை போட்டிருந்தான். அந்த அம்மா முரளி அருகே வந்து,

“உங்க பொண்ணுக்காக காத்திருக்கோம் சார்'' என்றார் அந்த அம்மா.

“ஏன்? யார் நீங்க? '' என்றான் முரளி.

“என் பையனுக்கு கேன்சர். கீமோதெரபி சிகிச்சையால தலையில முடி எல்லாம் கொட்டிடுச்சி. ஸ்கூலுக்கு வந்தா எல்லோரும் கிண்டல் பன்னுறாங்கன்னு வரமாட்டுறான். நேத்து டீச்சர்கிட்ட சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன். அப்போ என்னை பார்த்த சைந்தவிதான் சொன்னா, ‘நானும் மொட்டை போட்டுகிட்டு வரேன், அப்போ யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்கன்...'னு. அதனால என் பையனும் ஸ்கூல் வரேன்னு சொன்னான்' என்றார் அந்த அம்மா கண்களில் கண்ணீருடன்.

தன் மகளின் பெருந்தன்மையை நினைத்து மெய் மறந்து நின்றான் முரளி...




No comments:

Post a Comment