Saturday, 18 July 2015

பண்பு! - குமுதம் (20-07-2015) இதழில் வெளிவந்தது

பண்பு !


அழைப்பு மணி அடித்தது, கதவைத் திறந்ததும் தர்மன் பரபரபரப்போடு நின்றிருந்தான்...


"ஹரீஷ் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்டா, ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம். என்னை எக்மோர்ல டிராப் பன்னுடா... 8.00 மணி டிரையினை பிடிச்சி ஊருக்கு போகனும்" என்றான் பதட்டமாய். அந்த பதட்டம் ஹரீஷையும் தொற்றிக் கொள்ள,


"காரை எடு, இதோ வந்திடுறேன்." என்று விரைந்து கிளம்பி வந்து காரில் ஹரீஷ் ஏற, இருவரும் எக்மோர் விரைந்தார்கள். சிறிது தூரம் சென்றதும், ஒரு சிக்னல் வர காரை நிறுத்தினான் தர்மன்.


"காலையில ரோடே காலியா இருக்கு. சிக்னல் ரெட் போட்டிருக்குன்னு ஏன் நிறுத்துற?" என்றான் ஹரீஷ். பேசாமல் சிக்னலையே பார்த்திருந்தான் தர்மன்.


அவர்களுக்கு அருகே ஸ்கூட்டியில், பள்ளி யூனிஃபார்மில் இரு குழந்தைகள் அமர்ந்திருக்க, அவர்களின் அம்மா அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். பச்சை சிக்னல் மாறும் வரை காத்திருந்த தர்மன், அதற்கு பின்பே கிளம்பினான்.


"ஏன் தர்மா, காரை நிறுத்தின?" என்றான் ஹரீஷ்.


"ரெட் சிக்னல் போட்டிருந்தா நிக்கனுமுன்னு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாங்க. அப்போது நாம நிக்காம வந்திருந்தா அம்மா சொல்வது சும்மான்னு மனசுல பதிஞ்சுடும். பாடம் மட்டுமல்ல பண்பையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். என்னோட அம்மா இதுபோல பண்பையும் சொல்லிக் கொடுத்தாலதான் இந்த சின்ன வயசுலேயே பொது மேலாளராக இருக்கேன்." என்றான் தர்மன்.


Monday, 30 March 2015

தோழமை! - மல்லிகை மகள் (ஏப்ரல்-2015) இதழில் வெளிவந்தது

தோழமை!

“அப்பா நான் மொட்டை அடிச்சிக்கனுப்பா'' என்றாள் சைந்தவி.

“விளையாடுறியா. எவ்வளவு நீளமா இருக்கு தலைமுடி. சும்மா இரு" என்று அதட்டினான் முரளி.

“மொட்டை போட்டுவிட்டாதான் ஸ்கூலுக்கு போவேன்'' என்று அழுதபடி அடம்பிடித்தாள் சைந்தவி.

வேறு வழி இல்லாமல் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை போட்டு விட்டான் முரளி. அதன் பின்னரே பள்ளிக்கு கிளம்பினாள் சைந்தவி. நேரம் ஆக பள்ளிக்கு விரைந்து அழைத்துச் சென்றான் முரளி.

பள்ளியின் கேட் அருகே ஒரு அம்மாவும் சைந்தவி வயதுடைய பையனும் நின்றிருந்தனர். அருகே சென்றபின்தான் கவனித்தான், அந்த பையன் தலையில் மொட்டை போட்டிருந்தான். அந்த அம்மா முரளி அருகே வந்து,

“உங்க பொண்ணுக்காக காத்திருக்கோம் சார்'' என்றார் அந்த அம்மா.

“ஏன்? யார் நீங்க? '' என்றான் முரளி.

“என் பையனுக்கு கேன்சர். கீமோதெரபி சிகிச்சையால தலையில முடி எல்லாம் கொட்டிடுச்சி. ஸ்கூலுக்கு வந்தா எல்லோரும் கிண்டல் பன்னுறாங்கன்னு வரமாட்டுறான். நேத்து டீச்சர்கிட்ட சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன். அப்போ என்னை பார்த்த சைந்தவிதான் சொன்னா, ‘நானும் மொட்டை போட்டுகிட்டு வரேன், அப்போ யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்கன்...'னு. அதனால என் பையனும் ஸ்கூல் வரேன்னு சொன்னான்' என்றார் அந்த அம்மா கண்களில் கண்ணீருடன்.

தன் மகளின் பெருந்தன்மையை நினைத்து மெய் மறந்து நின்றான் முரளி...




Monday, 24 March 2014

தண்டனை! - குங்குமம் (31-03-2014) இதழில் வெளிவந்தது

தண்டனை!

“சார், நம்ம சர்வர் முத்துவுக்கு சம்பளத்தை குறைங்க. கஸ்டமர்கிட்ட சிடுசிடுன்னு எரிஞ்சு விழறானம்... டிப்ஸ் கேட்குறானாம்.. பலரும் புகார் சொல்றாங்க. கூட வேலை பாக்குறவங்களுக்கும் அவனை பத்தி நல்ல அபிப்ராயம் இல்லை!” - ஹோட்டல் முதலாளியிடம் சொன்னார் மேனேஜர் வாசன்.

“முத்து பல வருஷமா இருக்கான். நேரம் காலம் பார்க்காம வேலை செய்யுறான். அதை நாம் அங்கீகரிக்கணும். மத்தவங்க  சொல்றதை வைச்சி ஒரு முடிவுக்கு வரக் கூடாது!” என்றார் முதலாளி,

ஆனாலும் மேனேஜர் சமாதானம் ஆகவில்லை. தயங்கியே நின்றார்.

“நீங்க வேணும்னா முத்து பின்னாடியே போய் நிஜத்தில் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுச் சொல்லுங்களேன்” என அனுப்பி வைத்தார் முதலாளி.

அடுத்த நாள், உற்சாக முகத்தோடு வந்து நின்றார் மேனேஜர்.

“சார், முத்துவுக்கு சம்பளம் ஏத்தி கொடுங்க சார். அவன் எந்த தப்பும் செய்யலை. தேவையில்லாத இடத்துல ஓடுற ஃபேனையும், லைட்டையும், நிறுத்த சொல்லுறான். அது மற்றவர்களுக்கு பிடிக்காம புகார் சொல்றாங்க...” என்றார் வாசன்.

“இதுதான் சரி. எந்த ஊழியரையும் அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு தண்டிக்கக் கூடாது. அப்படி செய்தா ஆத்மார்த்தமான ஊழியர்கள் நம்மை விட்டு போய்டுவாங்க” என்றார் முதலாளி.



Tuesday, 23 October 2012

அனுபவம்! - குமுதம் (31-10-2012) இதழில் வெளிவந்தது

அனுபவம்!

“ரமேஷ் அந்த ஸ்பானரை எடுடா”

“ரமேஷ் தண்ணீர் கொண்டு வா”

“அந்த பர்னரை எடுத்துட்டு வா சீக்கிரம்”

“ரமேஷ் இங்கே வந்து கதவை திற” என்று முதலாளி முரளி முதல் மற்ற அனைவரும் ஆளுக்கு ஆள் ரமேஷை விரட்டியபடி வேலை வாங்கினார்கள். ரமேஷும் முகம் சுளிக்காமல் வேலைகளை மின்னல் வேகத்தில் செய்து முடித்தான்.

ஓரு வருடம் முடிந்ததும் வாகனங்களின் அனைத்து வேலைகளையும் நன்றாக கற்றுக் கொண்ட பின், முரளி, துளசியிடம் விடைபெற்றுச் சென்றான். சில வாரங்கள் கழித்து, முரளியின் வீட்டு வாசலில், பெரிய கார் வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கிய ரமேஷ். கையில் தட்டுடன் வந்து முரளி, துளசியிடம் கொடுத்து விட்டு, கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். துளசி தட்டை வாங்க, அதில் கண்ணை பறித்தது, சிகப்பு வண்ணப் பட்டுப்புடவை. அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் நின்றனர்.

“இரண்டு பேரும் என்னை மன்னியுங்கள். நான் யார் என்று சொல்லாமல் வேலைக்குச் சேர்ந்ததால்தான் அனைத்து வேலைகளையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடிந்தது. எந்த ஒரு அனுபவமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களை வழிநடத்த முடியுது.” என்றான் ரமேஷ்.

“அப்ப, நீ... நீ... நீங்க யார்?” என்று கேட்டான் முரளி.

“விஸிடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று 10 நாட்கள் ஆகிறது,” என்றான் ரமேஷ்.




Monday, 8 August 2011

உழைப்பு! - குமுதம் (10-08-2011) இதழில் வெளிவந்தது

உழைப்பு !

''பிரபு, ஏன் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையை சொல்லித்தருவதில்லையாம்! ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித்தருகிறாராம்.'' என்று கேட்டார் பொது மேலாளர்.

''மன்னிக்கனும் சார், ஏதாவது ஒரு புதிய வேலைய எங்கள் இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள் ஆட்களுக்கு சொல்லித் தருகிறோம். அடுத்த வாரம் அதே போல வேலையை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து, நீங்களே நேரடியாக கண்காணியுங்கள்.'' என்றான் பிரபு. அதே போல ரகுவுக்கும் பிரபுவுக்கும் புது வேலையைக் கொடுத்தார் பொது மேலாளர்.

ரகுவின் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில் பிரபுவின் ஆள் வேலையை முடித்து விட்டான். ரகுவின் ஆள் மூன்று முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான். ஒரு வழியாக 5 மணி நேரத்தில் முடித்தான். பொது மேலாளர் பிரபுவை அழைத்து,

''எப்படி முடிந்தது?'' என்று கேட்டார் பொது மேலாளர்.

''சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக் கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது. அதனால் விளைவுகளை மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ என்று நேரம் கொடுத்து விட்டுடனும். தேடிபிடிச்சி கத்துகிட்டா, கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும் பணத்திற்கு மதிப்பு அதிகம்.''  என்றான் பிரபு.

''நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைப்படுகிறேன்.'' என்றார் பொது மேலாளர்.


Thursday, 30 June 2011

அவசர வேலை! - குமுதம் (6-7-2011) இதழில் வெளிவந்தது

அவசர வேலை!

''ஏங்க நம்ம குழந்தைய பள்ளிக்கூடம் அழைச்சிட்டு போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துட்டு ஆபீஸ் போங்க' என்று சொன்னாள் நீலா

''போடி எனக்கு ஆபிஸ்ல அவசரமான வேலை இருக்கு. டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா' என்று சொல்லி விட்டு அலுவகத்திற்கு கிளம்பினான் ராஜன்.

''ஆமாம் பிள்ளையின் பாட புத்தகத்தை வாங்கிக் கூட முடியாமல் அப்படி என்ன ஆபீஸ் வேலையே போங்க' என்று எரிச்சலாய் சொன்னாள் நீலா சிறிது நேரத்தில், நீலா சமையலை முடித்துவிட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று, புத்தகங்கள் வாங்க வரிசை நின்று கொண்டிருந்தாள்.

அப்போது ராஜனின் முதலாளி மனைவியும் அவரது குழந்தைகளும் பள்ளியிலிருந்து வெளியே வந்தார்கள். பின்னாடியே, முதலாளியின் குழந்தைகளின் புத்தகங்களைத் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தான் ராஜன்.

அவன் முன் முன்னாடி போய் நின்றாள் நீலா. 'இதுதான் அவசரமான வேலையா ? ' என்று கேட்டாள்.

ராஜனால் பதிலே பேச முடியாமல் பேய் முழி முழித்தான்.

Friday, 20 May 2011

சுத்தம்! - குமுதம் (25-5-2011) இதழில் வெளிவந்தது

சுத்தம்!

''இங்கே எச்சில் துப்பக் கூடாது'' என்றாள் ராணி.

''ஏம்மா துப்பக் கூடாது ?.' என்றான் ராமு.

''இது ஸ்கூல் எல்லா மாணவர்களும் நடமாடும் இடம்'' என்றாள் ராணி.

''அதனால என்ன?'' என்றான் ராமு.

''எச்சிலை மிதிச்சா தொற்று நோய் பரவுமுல்ல. அதனால தான்'' என்றாள் ராணி.

அவனுக்கு தப்பு செய்த மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடிச்சது மாதிரி இருந்தது.

''ஆமாம். சரிதான். தெரியாம பண்ணிட்டேன். இனிமேல் கண்ட இடத்தில் எச்சில் துப்ப மாட்டேன்.'' என்றான் ராமு.

வண்டி பள்ளி முன்பு நிற்க,

''சரி நான் வரேன். ஸ்கூலுக்கு மணி ஆச்சு'' என்று சொல்லிவிட்டு, வண்டியை விட்டு இறங்கி சென்றாள் நான்கே வயதான பள்ளி மாணவி ராணி, வாயடைத்து நின்றான் தனியார் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராமு.