Friday, 25 February 2011

அம்மா! - மல்லிகை மகள் (மார்ச்-2011) இதழில் வெளிவந்தது

அம்மா!

"ஏம்மா.. அவர் திரும்ப இங்கு வர்ற வரைக்கும் இருக்குறேன்னு வந்த.. ரெண்டு நாளிலேயே திரும்ப ஊருக்கு போயிட்ட? " போனில் கேட்டாள் பிரபா.

"ஆமா! மாப்பிள்ளைகிட்ட போன்ல பேசுறப்பவே பாடா படுத்தி எடுக்குற, இன்னும் நேர்ல எப்படி படுத்துவே! அதை எல்லாம் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.. அதான் வந்துட்டேன். ஆனாலும் மாப்பிள்ளைக்கு ரொம்பதான் பொறுமை." என்றார் மரகதம்மாள்.

"ஆமா நான் கேட்டுக்குற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டாமா? " என்றாள் பிரபா.

"ஆமா.. நீ எஜமானி மாதிரி நீ கேட்குற தோரணையே ஆளை அடிக்குற மாதிரி இருக்கு. அவருக்கு பெத்தவங்க இல்லைங்கிறதுக்காக உனக்கு அடிமையில்லை. உன் பிள்கைகள் யாராவது திட்டினா, நீ சும்மா இருப்பியா? அது போலதான் மாப்பிள்ளையோட அம்மா இருந்தா நீ பேசுறத பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா?

உனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கார். தனக்கு வர போற மனைவி, அன்பான அம்மாவா, மணக்கும் மனைவியா  தோழமையான தோழியா இருப்பானு நினைச்சிதான் உன்னை கல்யாணம் செய்திருப்பார். ஆனால் நீ அப்டியா நடந்துக்குற? அவருக்கும் மனசும், உணர்வும் இருக்குன்னு புரிஞ்சுக்கோ.

ஒரு அம்மா மனைவியாக முடியாது. ஆனா, ஒரு மனைவி  அம்மாவாக முடியும். அதை நீ முழுமையா உணர்ந்தாதான் வாழ்க்கையை சந்தோசமா வாழ முடியும். நீ மட்டுமல்ல உன் குழந்தைகளும்.” என்றார் மரகதம்மாள்.

பிரபாவுக்கு நெத்தியில் அடித்தார் போல இருந்தது அம்மாவின் வார்த்தைகள். அம்மாவிடம் சொன்னாள்..

“மன்னிச்சிடும்மா, இனிமே அவர் என்னுடைய மூத்த குழந்தை போல பார்த்துக்குறேன்.”



Wednesday, 17 November 2010

மரியாதை - குமுதம் (24-11-2010) இதழில் வெளிவந்தது

மரியாதை !

"என்னடா சோமு, எல்லோரும் உனக்கு வணக்கம் சொல்லுறாங்க, நீயோ! உனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு தேடி போய் வணக்கம் சொல்லுற, அவர் சங்கடமா நெளியுறார்." என்றான் ராமு.

"அவர் அனுபவம் என்னுடைய வயது. 30 வருடமா இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்." என்றான் சோமு.

"அதனால என்ன?" என்றான் ராமு.

"இந்த நிறுவனம் ஒரு கட்டிடம் மாதிரி, அவரை போன்ற மூத்த ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் கடின உழைப்பையும் பல தியாகங்களையும் செய்ததின் பலனாகதான் நற்பெயர், புகழ், பல கிளைகள் என இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போன்றவர்கள். அவர்களை விட முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் போல் மற்றவர்களுக்கு எங்களைப் பார்த்தால் தோன்றும், ஆனால் நாங்களோ 2வது தளம், 3வது தளம் போன்றவர்கள், அவர்களுக்கு உதவி செய்யவே நாங்கள்.

அவருக்கு தெரிந்த விசயங்களில் 10 சதவீதம் கூட எனக்கு தெரியாது, தெரிந்த மாதிரி காட்டிக் கொள்வேன். தேடி போய் வணக்கம் சொல்வது அவரின் அனுபவத்திற்குதான்.” என்றான் சோமு.

“சின்ன வயதில், பெரிய பதவியில் இருப்பதன் அர்த்தம் இப்ப புரியுது” என்றான் ராமு.



Thursday, 30 September 2010

சொத்து! - குமுதம் (6-10-2010) இதழில் வெளிவந்தது

சொத்து!

"என்னங்கையா கெட்டுப்போன வெங்காயமா எடுத்து இருக்கீங்க?'' என்று கேட்டான் கடைக்காரன்.

"வீட்டுல டி.வி. பார்த்துகிட்டு இருந்த என்னை என் மனைவி வெங்காயம் வாங்க அனுப்பிட்டா. அதான் கெட்டுப்போன வெங்காயத்தை வாங்கிட்டு போனா அடுத்த முறை கடைக்கு அனுப்பமாட்டால்ல'' என்று சொன்னான் ராமு.

"அய்யா, கெட்டுப்போனதை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தான் போடுவாங்க. நீங்க வாங்கிட்டு போற வெங்காயத்தை நீங்கள் மட்டுமில்லை உங்கள் குழந்தைகளும் சாப்பிடுவாங்க. நம்ம குழந்தைகளுக்கு நாம கொடுக்கின்ற சொத்தே ஆரோக்கியம் தான்'' என்று சொன்னான் கடைக்காரன்.

ராமுக்கு முகத்தில் 'பளார்' என்று அறைந்தார் போல இருந்தது கடைக்காரன் கூறியதை கேட்டதும்.  வெங்காயம் விற்கும் கடைக்காரனுக்கு இருக்கும் அறிவு கூட, நமக்கு இல்லையே என்று,  கெட்டுப்போன வெங்காயத்தை கொட்டிவிட்டு, நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றான்...